

சென்னை: வெளிநாட்டைச் சேர்ந்த, ‘சைபர் க்ரைம்’ மோசடி கும்பல் சென்னையில் அலுவலகம் அமைத்து மோசடிசெய்ய திட்டமிட்டதை போலீஸார் முறியடித்துள்ளனர். தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மும்பை போலீஸ்அதிகாரிகள் என்ற பெயரில் போனில் மிரட்டி பணத்தை அவர்களுக்கு அனுப்ப வைத்தும், குறுந்தகவல்கள் மூலம் லிங்குகளை அனுப்பி பணத்தாசை காட்டியும் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டும் சம்பவங்கள் உட்பட பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்தவாறே தமிழகத்தில் பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல், சென்னையில் இருப்பிடம் அமைத்து மோசடியில் ஈடுபட முயன்றதை சிபிசிஐடி பிரிவு போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:
சென்னை விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை பயணம் செய்ய காத்திருந்த சீன வம்சாவளியினர் எனக் கூறப்படும் மலேசியாவில் வசிக்கும் லியாங்ரோஸ் ஷெஸ், ஷான்மெஸ் ஷாங் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
இதில், இருவரும் இணையதள மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் கால் பதிக்கதிட்டமிட்டு சென்னையில் ஐ.டிநிறுவனங்கள் அதிகம் உள்ளபகுதிகளில் தங்களது அலுவலகத்தை தொடங்க இருந்ததும் தெரியவந்தது.
முதல்கட்டமாக சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். அங்கிருந்தவாறே ஆன்லைன் விளையாட்டு, மோசடியான குறுந்தகவல்கள், போலீஸ் அதிகாரிகள் போன்று மிரட்டி பணம் பறிப்பது உட்பட பல்வேறு வகையான சைபர்மோசடி மூலம் பணம் மோசடி செய்ய தயாராக இருந்தது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து லேப்டாப்கள், சிம்கார்டுகள் மற்றும் பல்வேறு வகையான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கும் மலேசியாவைச் சேர்ந்த கும்பல் ஒன்றுக்கும் தொடர்புஇருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் சுற்றுலாவிசாவில் இவர்கள் சென்னை வந்துள்ளனர். எந்தெந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர், இவர்களுடன்தொடர்பில் இருந்தவர்கள் யார்என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோசடி கும்பல் ஆரம்ப நிலையிலேயே சிக்கியதால் பெரிய அளவிலான சைபர் க்ரைம் மோசடி தடுக்கப்பட்டுள்ளது என சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.