

ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி மாவட்டம் பாம்புகோவில்சந்தை அருகே தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினின் முன் பக்க இரும்பு பேனல் சேதமடைந்தது. இது பொதிகை ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் சொல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) ரயில் நேற்று மாலை 6:30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டது. இரவு 7:10 மணி அளவில் கடையநல்லூர் - பாம்புகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்த போது ரயில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ரயில் மோதியதில் பலத்த சத்தத்துடன் இன்ஜினின் முன் பக்க இரும்பு பேனல் சேதமடைந்தது.
இதையடுத்து, ரயில் தண்டவாளத்தில் பல அடி தூரத்திற்கு உடைந்த கற்கள் சிதறி கிடந்தன. இது குறித்து ரயிலை இயக்கிய பெண் லோகோ பைலட் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த கல் துண்டுகளை சேகரித்தனர். ரயில்வே பொறியியல் துறையினர் ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்து பிரச்சினை ஏதும் இல்லை என தெரிவித்த பின்னர், அடுத்த ரயில் அவ்வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது.
மாலை 4:20 மணிக்கு இவ்வழியாக குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றபோது, எந்த பிரச்சினையும் இல்லை. அதன் பின்னர் தான் ரயில் தண்டவாளத்தில் யாரோ கல்லை வைத்துள்ளனர். சிறுவர்கள் யாரும் விளையாட்டாக தண்டவாளத்தில் கல்லை வைத்தனரா அல்லது பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்ற கோணத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் இருப்புப் பாதை காவல் நிலைய எஸ்.ஐ ஶ்ரீராமலு தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர் - பாம்புகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த இரு மாதங்களுக்கு முன் தண்டவாள கிளிப்புகள் கழட்டி விடப்பட்டு இருந்துள்ளது. அவ்வழியே வேறு ரயில்கள் வரும் முன் அதைக் கண்ட ரயில்வே ஊழியர்கள் சரி செய்ததால், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.