

கோப்புப் படம்
சென்னையில் இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 61 போதைப் பொருள் வழக்குகளில் 2 வெளிநாட்டினர் உட்பட 130 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 131 கிராம் மெத்தம்பெட்டமைன், 219 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலை - சிஎன்கே சாலை சந்திப்பு அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 18-ம் தேதி காலை அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த 5 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அவர்கள் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அம்பத்தூரை சேர்ந்த சாருகேஷ் (21), எழும்பூரை சேர்ந்த ரோஷன்ராஜ் (21), ரித்திஷ்வர் (18), சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ரபிஜாக் (26), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஹரி கண்ணன் (25) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8.5 கிராம் மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது.
மேலும் 5 பேர் கைது: அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடைய, ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (24), காஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (25), பாரிமுனையை சேர்ந்த முகமது இம்ரான்கான் (28), கேளம்பாக்கத்தை சேர்ந்த கோகுல் ரமணன் (26), சிவகங்கையை சேர்ந்த முகமது அப்ரித் (18) ஆகிய 5 பேரை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் போலீஸார் நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்து 24 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ.3 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மட்டுமின்றி, அவர்களது பின்னணியில் செயல்படுபவர்களையும் கண்டறிந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், நைஜீரியா, சூடான் நாட்டினர் 2 பேர், திரிபுரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 20 பேர் உட்பட 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 131.6 கிராம் மெத்தம்பெட்டமைன், 219.27 கிலோ கஞ்சா, 2,701 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.