

மலையாள சினிமாவின் மூத்த நடிகரும் இயக்குநருமான ஸ்ரீனிவாசன் (69) காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொச்சி அருகிலுள்ள திருப்பூணித்துறா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார்.
பின்னர் அவர் உடல் எர்ணாகுளத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கண்டநாடுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் எர்ணாகுளம் டவுன் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதிச் சடங்கு இன்று (டிச.21) காவல் துறை மரியாதையுடன் நடக்கிறது. மறைந்த ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவி, தியான், வினீத் ஆகிய மகன்கள் உள்ளனர்.
50 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் இருந்த ஸ்ரீனிவாசன், 225 படங்களில் நடித்துள்ளார். தமிழில், லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்ட அவரது படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும்.
கதபறயும்போல், தட்டத்தின் மறயத்து ஆகிய படங்களைத் தயாரித்துள்ள அவர், வடக்கு நோக்கி எந்திரம் உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழில் திண்டுக்கல் சாரதி என்ற பெயரில் ரீமேக் ஆனது.
ஸ்ரீனிவாசன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், திலீப், மஞ்சுவாரியர் உள்பட ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கலில், “என் நல்ல நண்பன் ஸ்ரீனிவாசன் மரணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் திரைப்படக் கல்லூரியில் என் வகுப்புத் தோழர். ஒரு சிறந்த இயக்குநர், நடிகர் மட்டுமல்ல, மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.