

பிரதீப்
திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் வே.சரவணன், காவல் ஆணையர் என்.காமினி, மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் 706 காளைகள் பங்கேற்றன. 306 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கார், புல்லட், பைக் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, கரூர் மாவட்டம் ராச்சாண்டார் திருமலை அழகாபுரத்தைச் சேர்ந்த இளையராஜா மகன் பிரதீப் (16) என்ற பிளஸ் 2 மாணவர், தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்தார்.
அப்போது காளை முட்டியதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல, காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் உட்பட 59 பேர் காயமடைந்தனர்.