எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது - பிரபலமாக முயற்சி என வாக்குமூலம்

எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் ஆதித்யாவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் ஆதித்யாவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
2 min read

மேட்டூர்: சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை தனிப்படை போலீஸார் 10 மணி நேரத்துக்குள் கைது செய்தனர்.

எடப்பாடி பேருந்து நிலையம் அருகே, எடப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அரசு பள்ளி, வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இது குறித்து தகவலறிந்த எஸ்பி அருண் கபிலன், சங்ககிரி டிஎஸ்பி ராஜா, காவல் ஆய்வாளர் பேபி உள்ளிட்டோர் எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள், காவல் நிலைய வளாகம் முழுவதும் ஆய்வு செய்தும், தீப்பற்றி எரிந்த பகுதியிலும் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, எஸ்பி அருண் கபிலன் உத்தரவின் பேரில், 3 தனிப்படை அமைத்து பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

தனிப்படை போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில், காவல் நிலையத்துக்குள் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு போன்ற பொருளை வீசியது தெரியவந்தது. இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசிய எடப்பாடி பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட கட்டபிரபு மகன் ஆதி (எ) ஆதித்யாவை (20) எடப்பாடி போலீஸார் இன்று மாலை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

தொடர்ந்து ஆதித்யாவிடம், எஸ்பி அருண் கபிலன் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகவும், சிறைக்கு சென்று வந்தால், மக்கள் தன்னை கண்டு அஞ்சுவார்கள் என்பதற்காகவும், பெட்ரோல் குண்டு வீசியதாக ஆதித்யா வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து, போலீஸார் ஆதித்யாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர், அவரை சிறையில் அடைக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் கூறும்போது, “எடப்பாடி காவல் நிலையத்தில் அதிகாலையில் மர்ம நபர் 2 பாட்டிலில் தீ வைத்து தூக்கி வீசினார். இதில் காவல் நிலையத்தில் இருந்த எந்த பொருளும் சேதம் அடையவில்லை. மேலும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. டிஎஸ்பி மேற்பார்வையில், எடப்பாடி காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்து 10 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்துள்ளோம்.

சமூக வலைதளங்களைப் பார்த்து, பிரபலமாக வேண்டும் என்று இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வழக்குகள் உள்ளன. ஆனால், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்யவில்லை,” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in