மரக்காணம் அருகே கடற்கரையோரம் 2 பெண் குழந்தைகள் உடல்கள் மீட்பு: போலீஸ் விசாரணை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

விழுப்புரம்: மரக்காணம் அருகே கடற்கரையோரம் 2 பெண்குழந்தைகளின் உடல்களை போலீஸார் மீட்டனர். இந்நிலையில், போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மரக்காணம் அருகே கூனி மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த வேலு ( 33) .இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனந்த வேலுவுக்கும் அவரது மனைவி கௌசல்யாவிற்கும் கடந்த வாரம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு குழந்தைகளான ஜோவிதா ( 4) மற்றும் 18 மாத குழந்தையான சஸ்மிதா ஆகிய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்துக்கு கடந்த 10 ஆம் தேதி வந்துள்ளார்.

இவர் நேற்று பிற்பகல் (வியாழக்கிழமை) தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால் நேற்று இரவு முழுக்க இவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை குழந்தை சஸ்மிதாவின் உடல் இறந்த நிலையில் கூனிமேடு பகுதி கடற்கரையோரம் கரை ஒதுங்கியது. இதுபோல் சிறுமி ஜோபிதாவின் உடல் அனுமந்தை குப்பம் கடற்கரையோரம் ஒதுங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீஸார் கரை ஒதுங்கிய இரண்டு சிறுமிகளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் தனது குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்ற ஆனந்த வேலு இதுவரை எங்கு உள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. இதனால் ஆனந்த வேலு குடும்ப பிரச்சினை காரணமாக தனது குழந்தைகளுடன் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தனது குழந்தைகளை மட்டும் கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தப்பி ஓடி விட்டாரா என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை மரக்காணம் போலீஸார் துவக்கி உள்ளனர். ஆனந்த வேலு பிடிபட்டால் மட்டுமே உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸார் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in