

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப் பகுதியில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை நேற்றுஎன்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை (எ) துரைசாமி(42). பிரபல ரவுடி. 2022-ல்புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த, திருச்சியை சேர்ந்த இளவரசன் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட பல்வேறுவழக்குகள் துரைசாமி மீது உள்ளன.
இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்ததுரைசாமியை போலீஸார் தேடிவந்தனர். அவர் புதுக்கோட்டைஅருகே உள்ள வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில், உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீஸார் நேற்று மாலை அங்கு சென்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையத்துக்கும், தனியார் வேளாண் கல்லூரிக்கும் இடையிலான பகுதியில், சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் யூக்கலிப்டஸ் காட்டில் துரைசாமி பதுங்கி இருந்தது தெரியவந்தது.
உதவி ஆய்வாளர் காயம்: அவரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது, துரைசாமி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ஆயுதத்தால் தாக்கி உள்ளார். இதையடுத்து, தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் காவல் ஆய்வாளர் முத்தையன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அதற்குப் பிறகும் துரைசாமி போலீஸாரைத் தாக்க முயன்றதால், அவரை நோக்கி ஆய்வாளர் முத்தையன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த துரைசாமி, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த உதவி ஆய்வாளர் மகாலிங்கம், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த திருச்சி சரக டிஜஜி மனோகரன், புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே உள்ளிட்டோர் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும், சம்பவம் குறித்துகாவல் ஆய்வாளர் முத்தையனிடம் விசாரித்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.ஐ. மகாலிங்கத்தை சந்தித்து, ஆறுதல் கூறினர்.
சுட்டுக் கொல்லப்பட்ட துரைசாமியின் உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
57 வழக்குகள்... ரவுடி துரைசாமி மீது 4 கொலை வழக்குகள் உட்பட, தமிழகம் முழுவதும் 57 வழக்குகள் உள்ளன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. திருச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வீட்டில் நகை திருடப்பட்ட வழக்கில் துரைசாமியை போலீஸார் பிடித்துச் சென்றபோது, அவர் போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். அப்போது போலீஸார் அவரை சுட்டுப்பிடித்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.