

மதுரை: மதுரையில் பள்ளிக்குச் சென்ற 7-ம் வகுப்பு மாணவனை கடத்தி ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டிய கும்பலை, சுமார் 3 மணி நேரத்தில் துரத்திப் பிடித்து மாணவனை மீட்ட போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலெட்சுமி. இவருக்கு பைபாஸ் சாலை பகுதியில் காம்ப்ளக்ஸ் வீடுகள் உள்ளன. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இன்று (ஜூலை 11) காலை வழக்கம் போல் 8 மணிக்கு ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவனையும், அவரை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியையும் ஒரு கும்பல் கத்தி முனையில் கடத்தியது.
இதையடுத்து, மைதிலி ராஜலெட்சுமியிடம் செல்போனில் பேசிய அந்தக் கும்பல், மகனை விடுவிக்க ரூ.2 கோடி கேட்டுள்ளது. குறித்த இடத்துக்கு பணத்தோடு வராவிட்டால் மகனைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். போலீஸுக்குப் போனால் மகனை கண்டுபிடிக்க முடியாதபடி செய்துவிடுவோம் எனவும் அக்கும்பல் மைதிலியை மிரட்டியுள்ளது. இருப்பினும், இக்கடத்தல் சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் மைதிலி புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான போலீஸார் கடத்தல் கும்பலை செல்போன் டவர் மூலம் கண்காணித்து அவர்களை தேடினர். போலீஸார் தங்களை பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் மாணவனையும் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியையும் செக்கானூரணி அருகே நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதையடுத்து, இருவரையும் பத்திரமாக மீட்ட போலீஸார், கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவன் கடத்தப்பட்ட தகவல் கிடைத்த 3 மணி நேரத்துக்குள் மாணவனை மீட்ட தனிப்படையினரை காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் மாணவனின் உறவினர்கள் பாராட்டினர். இது குறித்து காவல் ஆய்வாளர் காசி கூறுகையில், “5 பேர் கொண்ட கும்பல் மாணவனை கடத்தியதாகத் தெரிகிறது. போலீஸார் தங்களை பின் தொடர்வதை அறிந்த அந்தக் கும்பல் மாணவனை செக்கானூரணி அருகில் இறக்கிவிட்டு தப்பியுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து தேடுகிறோம். விரைவில் பிடித்துவிடுவோம்” என்றார்.