

கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் பேறுகால மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஓராண்டாக இப்பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று வழக்கம் போல பணிகள் நடைபெற்றன. இதில் மதுரை மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், மதியம் நுழைவாயிலில் உள்ள பால்கனிக்கு மேல் உள்ள தூண் திடீரன இடிந்து விழுந்தது. அதில் இடிபாடுகளுக்குள் மூன்று பேர் சிக்கிக் கொண்டனர்.
அவர்களில் முனீஸ்வரன் (36), செல்வம்(30) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த கொத்தனார் நம்பிராஜன் (40) உயிர் பிரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கம்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.