Published : 24 Jun 2024 09:12 AM
Last Updated : 24 Jun 2024 09:12 AM
சென்னை: மதுரவாயலில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் தொட்டியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். அவர் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (36). வானகரம் மீன் சந்தையில் வேலை செய்து வந்தார். கடந்த 21-ம் தேதி காலை வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அவரது வீட்டின் அருகே, அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான பெரிய அளவிலான ராட்சத தொட்டியில் இளைஞர் ஒருவர் சடலமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் மதுரவாயல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார், தீயணைப்பு படை வீரர்களுடன் விரைந்து சென்று உடலைமீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில் கழிவு நீர் தொட்டியில் சடலமாக மிதந்தது ஏற்கெனவே மாயமான சரண்ராஜ் என்பது தெரியவந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை எவரேனும் கொலை செய்து இந்த கழிவு நீர் தொட்டிக்குள் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
20 அடி ஆழம்: இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘பாதாள சாக்கடையை சுத்திகரிப்பு செய்வதற்காக மதுரவாயலில் அரசு சார்பில் 20 அடி ஆழத்தில் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. பல மாதங்களாக பணி நடைபெற்று வரும் நிலையில், அதன் மேல்பகுதி முழுமையாக மூடப்படாமல் பாதியளவே மூடப்பட்டிருந்தது.
அந்த வழியாக சென்ற சரண்ராஜ் அதில் தவறி விழுந்து இறந்திருக்க வாய்ப்புள்ளது. தொட்டியை முழுமையாக மூடியிருந்தால் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம்’ என்றனர்.
அண்மையில் பெய்த மழை காரணமாக 20 அடி ஆழமுள்ள தொட்டியில் 7 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இதனால், பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT