

மதுரை: ‘நியோ மேக்ஸ்’ நிறுவன மோசடி வழக்கில் தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக பொருளாதார குற்றத் தடுப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரையை மையமாக கொண்டு ‘நியோ-மேக்ஸ்’என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதனுடைய துணை நிறுவனங்கள் செயல்பட்டன. இவற்றில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை பொருளா தார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான கமலக் கண்ணன் , பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. விசாரணையில், சுமார் ரூ. 260 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமை யிலான தனிப்படையினர் நிறுவனத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்து, இவ்வழக்கில் தலைமறைவானவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம், போடி பகுதியில் செயல்பட்ட ‘நியோ மேக்ஸ்’ நிறுவனங்களுக்கான முக்கிய நபராக இருந்த பாபு ராமநாதன் (57) மற்றும் முகவராக பணிபுரிந்த அவரது மகன் தனுஷ் (28) ஆகியோரை டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவரையிலும் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றத் தடுப்பு காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.