

சென்னை: போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் பயணிகள் விமானம் திங்கள்கிழமை அதிகாலை புறப்பட தயாராகி கொண்டிருந்தது. விமானத்தில் பயணிக்க வந்தவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் பிளாஸ் டாலி (31) என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆண் பயணி ஒருவர் மலேசியா செல்ல வந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்த போது, அது போலி என்பது தெரியவந்து. இதையடுத்து, அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்த அவர், இந்திய எல்லைக்குள் ரகசியமாக ஊடுருவி, மேற்கு வங்க மாநிலத்தில் சில மாதங்கள் தங்கியுள்ளார். அப்போது போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் கும்பலிடம் பணம் கொடுத்து, கொல்கத்தா முகவரியில் இந்திய பாஸ்போர்ட் பெற்று, ரயில் மூலம் சென்னை வந்துள்ளார்.
தற்போது போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, மலேசியாவுக்குச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.