

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் போதைப் பொருள் தடுப்புப்போலீஸார் கடந்த 24-ம் தேதி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தினர். காரில் இருந்த கும்பல் தப்பியோடிவிட்டது.
காரை சோதனையிட்டபோது, தலா 50 ஆயிரம் மாத்திரைகள் கொண்ட 10 பண்டல்கள் இருந்தன.அவை வலி நிவாரணி மாத்திரைகள் என்று தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீஸார், அதை சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வேதாளையைச் சேர்ந்த பிர்தவுஸ் கனி (41),ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக்சையது அப்துல்லா (39), பெரியப்பட்டினத்தைச் சேர்ந்த நலீம் கான் (33), திருப்புல்லாணியைச் சேர்ந்த முத்துபுல்லாணி (28) ஆகியோர் வலி நிவாரணி மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 4 பேரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.