ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் வெட்டி கொலை: போலீஸ் விசாரணை

கொலையான கலைவாணன்
கொலையான கலைவாணன்
Updated on
1 min read

தஞ்சாவூர்: ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் கலைவாணன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், நெய்குண்ணம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (30). ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ கா.சோ.க. கண்ணன் சகோதரி மகனான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு இருமூலையில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீட்டில் உள்ளவரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கலைவாணனை தேடி நள்ளரவு வயலுக்குச் சென்றனர். அப்போது,வயலில் அவரது முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர் உறவினர்கள் பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, போலீஸார் அந்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக அந்த பகுதியில் இருதரப்பினருக்கும் முன் விரோதம் இருந்ததாகவும், அதனால் வெட்டி கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இவரது தாத்தா கா.சோ. கணேசன் முன்னாள் எம்எல்ஏ ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in