Last Updated : 04 May, 2024 08:34 AM

3  

Published : 04 May 2024 08:34 AM
Last Updated : 04 May 2024 08:34 AM

யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது: கோவை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

சவுக்கு சங்கர் | கோப்புப் படம்

தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரை கோவை அழைத்துச் சென்றனர்.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாகக் கிடைத்த தகவலை ஒட்டி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சவுக்கு சங்கர் கைது குறித்து போலீஸார், “தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

சவுக்கு சங்கர் தனது பணி நிமித்தமாக அடிக்கடி தேனி வந்து செல்வார் எனத் தெரிகிறது. அந்தத் தகவலின் அடிப்படையிலேயே கோவை சைபர் க்ரைம் போலீஸார் அவரை தேனியில் வைத்துக் கைது செய்துள்ளனர். இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல் துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் ஸ்டாலின் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x