Published : 26 Apr 2024 04:10 AM
Last Updated : 26 Apr 2024 04:10 AM
சென்னை: ரூ. 5 ஆயிரம் மாமூல் தர மறுத்த பெட்டிக்கடைக்காரரை கத்தியால் வெட்டி மரணம் ஏற்படுத்திய வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பாபு என்பவர் தனது வீட்டின் முன்பாக பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்.10-ம் தேதி இரவு 8 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் யுவராஜ் ஆகிய இரு இளைஞர்கள் காவல் துறைக்கு அபராதம் செலுத்தி தங்களது இருசக்கர வாகனத்தை மீட்க வேண்டும் எனக் கூறி கத்தியைக் காட்டி ரூ.5 ஆயிரம் மாமூல் கேட்டுள்ளனர். அதற்கு பாபு மறுத்துள்ளார். கத்தியால் தாக்குதல்: பின்னர் சிகரெட் பாக்கெட் வாங்கிவிட்டு அதற்கும் பணம் தர மறுத்துள்ளனர்.
சிகரெட் பாக்கெட்டுக்கு பணம் கேட்ட பாபுவை இருவரும் கத்தியால் கடுமை யாகத் தாக்கி, கடையில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத் துள்ளனர். பின்னர் கல்லாப் பெட்டியில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பினர். இதனால் தலையில் பலத்த காயமடைந்த பாபு 2022 டிசம்பரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக கொள்ளையடித்தல், கத்தியால் தாக்கி மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.முருகானந்தம் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் பகவதிராஜ் ஆஜராகி குற்றச்சாட்டை நிரூபித்தார். அதையடுத்து நீதிபதி, குற்றம்சாட்டப் பட்ட பாலாஜிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தும், யுவராஜை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT