போலி நகைகளை அடகு வைத்து ஏமாற்ற முயன்ற 7 பேர் கைது @ காரைக்குடி

காரைக்குடியில் போலி நகை மோசடியில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடியில் போலி நகை மோசடியில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

காரைக்குடி: காரைக்குடியில் போலி நகைகளை அடகு வைத்து ஏமாற்ற முயன்ற திரைப்பட உதவி இயக்குநர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் போலி நகைகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் திருப்பத்தூர் காந்திபுரத்தைச் சேர்ந்த நாச்சியப்பன் (43) என்பவர் 18 பவுன் எடையுள்ள 2 சங்கிலிகள், 3 மோதிரங்கள், ஒரு டாலர் ஆகியவற்றை அடகு வைக்க முயன்றார். நகை மீது சந்தேகமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி பிரகாஷ், காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசு ஆகியோர் நாச்சியப்பனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த நகைகள் அனைத்தும் தங்கம் முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.

மேலும் அவரிடம் விசாரித்ததில் இந்த மோசடியில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த தமிழ்வாணன், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், காரைக்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால், முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ராமசாமி, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பீனு, சுபாஷ்குமார் (எ) கிருஷ்ணா ஆகியோருடன் சேர்ந்து செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 18 பவுன் போலி நகைகள், 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: “நாச்சியப்பன் சென்னையில் திரைப்பட உதவி இயக்குநராக உள்ளார். மேலும் ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில்’ ஈடுபட்டு வந்தார். இதன்மூலம் பழக்கமானவர்களை வைத்து போலி நகை மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இந்த கும்பல் கடந்த 7 ஆண்டுகளாக சென்னை வளசரவாக்கம், வடபழநி, ராமாபுரம், கிண்டி, கே.கே.நகர், ஈக்காட்டுதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களிலும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் வங்கியிலும் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளனர்.

மேலும் நகைகள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க, போலி நகைகளில் ‘ஹால்மார்க்’ முத்திரையை பதித்து பயன்படுத்தி வந்துள்ளனர். காரைக்குடி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தபோது நகைகள் மீது சந்தேகமடைந்த ஊழியர்கள் உரசி பார்த்ததால் போலி என்பது தெரியவந்தது”, என்று அவர்கள் கூறினர். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த டிஎஸ்பி பிரகாஷ், காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசு ஆகியோரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in