

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில், திருவிடைமருதூர் - ஒடிசா போலீஸார் இடையே நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் பகுதிக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து 100 போலீஸார் கடந்த மாதம் திருவிடைமருதூருக்கு வந்தனர். அவர்கள் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தவுடன், ஊருக்கு செல்வதற்கு தயாரானார்கள். இதனை அறிந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக், திருவிடைமருதூர் - ஒடிசா போலீஸாரை இணைத்து, அவர்களை 2 அணிகளாக பிரித்து, கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்தார்.
அதன்படி, டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக் தலைமையில் ஓர் அணி, திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ஜெயந்திர சரஸ்வதி தலைமையில் மற்றொரு அணி என 2 அணிகளும், கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டியில் விளையாடினர், இதில், ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காவல் ஆய்வாளர் அணி மற்றும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு, திருவிடைமருதூர் டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக், பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கினார்.
பின்னர், கடந்த 30 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஒடிசா மாநில போலீஸாருக்கு நன்றியையும், வாழ்த்துக்களை தெரிவித்து, திருவிடைமருதூர் போலீஸார் கைகளை தட்டி, வழியனுப்பி வைத்தனர். அவர்களும், திருவிடைமருதூர் போலீஸாரின் இந்நிகழ்ச்சியை கண்டு, நெகிழ்ச்சியுடன் பிரியா விடை அளித்துப் புறப்பட்டுச் சென்றனர்.