

மதுரை: முன்விரோதம் காரணமாக மேலூர்அருகே கார் மீது டிபன் பாக்ஸில்அடைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதிலிருந்து தப்பிக்க முயன்ற இளைஞரை கும்பல் அரிவாளால் வெட்டியதில் அவரது கை விரல்கள் துண்டாயின.
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு அருகேயுள்ள அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் வீரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த6-ம் தேதி நடந்தது. அதில் மேளதாளங்கள் இசைத்தபோது அதேஊரைச் சேர்ந்த வெள்ளையத் தேவன் மற்றும் அவரது நண்பர்கள் ஆடிப்பாடி வந்தனர்.
இதை அதே ஊரைச் சேர்ந்த நவீன்(25), அவரது சித்தப்பா ராஜேஷ்உள்ளிட்டோர் கண்டித்தனர். இதுதொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் முற்றி முன்விரோதமாக மாறியது. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில், கீழவளவு பேக்கரி ஒன்றின் அருகே நேற்று முன்தினம் நவீன் தனது காருடன் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த வெள்ளையத்தேவன் மற்றும் அவரது நண்பர்கள் டிபன் பாக்ஸில்அடைத்த 4 நாட்டு வெடிகுண்டுகளை நவீன் கார் மீது வீசினர். இதில் காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதிர்ச்சி அடைந்த நவீன் காரிலிருந்து இறங்கினார்.
அப்போது, வெள்ளையத்தேவன் மற்றும் அவரது நண்பர்கள்சேர்ந்து நவீனை அரிவாளால் வெட்டினர். அதைக் கையால் தடுத்தபோது, அவரது வலதுகையின் ஆட்காட்டி விரல், நடுவிரல் துண்டாயின. மேலும், சண்டையைத் தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரான மலம்பட்டியைச் சேர்ந்த கண்ணனுக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து, வெள்ளையத் தேவன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பினர்.
தகவலறிந்த கீழவளவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்த நவீன், மதுரை தனியார் மருத்துவமனையிலும், ஆட்டோ ஓட்டுநர் கண்ணன், மேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
இதுதொடர்பாக வெள்ளையத்தேவன்(25), அவரது அண்ணன் அசோக்(29), மற்றும் அஜய்(24), கார்த்தி(25), வசந்த்(25), கண்ணன்(45), பாலு(35) மைக்கேல் என்றமகாலிங்கம்(28) ஆகிய 8 பேர் மீது கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் வெள்ளையத் தேவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. முக்கிய நபர்கள் 2 பேர் பிடிபட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.