Published : 15 Apr 2024 06:14 AM
Last Updated : 15 Apr 2024 06:14 AM
சென்னை: சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை கடத்தி, விற்க முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித்மண்டல். இவரது மனைவி சஞ்சனா மண்டல். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடைபாதையில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர் அருகே சஞ்சனா மண்டல் நேற்று மதியம் அமர்ந்திருந்தார். அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனாமண்டல் தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீசில் சுஜித்மண்டல் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். தொடர்ந்து, சென்ட்ரல் மற்றும் புறநகர் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, குழந்தை மாயமானது தொடர்பாக எல்லா காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
எண்ணூரில் குழந்தை விற்பனை: இதற்கிடையில், எண்ணூரில் 2 வயது பெண் குழந்தையை விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக அங்குள்ள போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்து குழந்தையை மீட்டு விசாரித்துவந்தனர்.
அப்போது, சென்ட்ரலில் 2 வயது குழந்தை காணாமல் போனது தொடர்பாக தகவல் அவர்களுக்கு கிடைத்தது. இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் விரைந்து சென்று சிறுமியைமீட்டனர்.
குழந்தை மீட்பு: இது குறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், “சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய டிக்கெட்கவுன்ட்டர் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை இரண்டு பேர் கடத்தி சென்றுள்ளனர். இந்த குழந்தையை எண்ணூரில் விற்க முயன்றனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் எண்ணூர் போலீஸார் விரைந்து சென்று, திருவொற்றியூரைச்சேர்ந்த செல்வம், கார்த்திக் ஆகியோரை கைது செய்து, குழந்தையை மீட்டனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT