

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
போதைப் பொருள் கடத்தல்விவகாரத்தில் கைதான தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக்கைபோலீஸார் 7 நாட்கள் காவலில்எடுத்து விசாரித்தனர். இதில்,தமிழ், இந்தி சினிமா தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள்,தொழிலதிபர்கள் என பல முக்கிய பிரமுகர்களுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரிந்தது. அரசியல் கட்சிக்கு பல லட்சம் ரூபாய் நிதி அளித்ததும் தெரியவந்தது.
அவரது முக்கிய கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா என்ற சதானந்தம் (50), சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்து, அவரையும் மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீஸார் சமீபத்தில் கைது செய்து, டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
போதைப் பொருட்களை உணவு (சத்துமாவு) பாக்கெட்களில் அடைப்பதற்காக அவர்கள்தனியாக குடோன் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, திருச்சி, சென்னையில் உள்ளகுடோனில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே, 7 நாள் காவல் முடிந்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸாரின் கோரிக்கையை ஏற்று, அவரிடம் விசாரணை நடத்த மேலும் 3 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணையில் அவர் அளித்த தகவலின்பேரில் அவரிடம் இருந்து 7 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. அதில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் செல்போன் எண்கள்,தகவல்கள், வீடியோக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், விசாரணைக்காக ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீஸார் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னைக்கு அழைத்து வந்தனர். காலை 6.30 மணி அளவில் சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் செயல்படும் மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறையின் சென்னை மண்டல அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் போதைப் பொருள் தடுப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். மாலை 7.30 மணி வரை விசாரணை நடந்தது.
அப்போது, போதைப் பொருள் கடத்தலின் பின்னணி, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், எங்கெல்லாம் போதைப் பொருள் கடத்தப்பட்டது, அதன்மூலம் கிடைத்த பணம் யாருக்கெல்லாம் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது உட்பட பல்வேறு தகவல்களை எழுத்து, வீடியோ வடிவில் பதிவு செய்தனர்.
விசாரணை முடிந்த பிறகு, சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீடு உட்பட வேறு சில இடங்களுக்கு அவரை அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர். பின்னர், மீண்டும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலம் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.