

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் கைதான இருவரின் நீதிமன்ற காவல் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக சிறுமியின் பெற்றோரின் ரத்த மாதிரியை மருத்துவக் குழுவினர் இன்று சேகரித்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 9 வயது பள்ளிச் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்சோ வழக்கில் கைதான இருவரிடம் ரத்தமாதிரிகள் மருத்துவக் குழுவினரால் சிறையில் சேகரிக்கப்பட்டன.
குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் மரபணு பரிசோதனை மூலம் சிறுமி அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதனடிப்படையில் சிறுமி சடலத்திலிருந்து மரபணு எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது பெற்றோரிடம் ரத்தமாதிரிகள் மருத்துவக் குழுவினரால் இன்று சேகரிக்கப்பட்டுள்ளன.பின்பு அந்த ரத்த மாதிரிகளை கிருமாம்பாக்கத்தில் உள்ள தடவியல் துறைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
குற்றம்சாட்டப்பட்டோரின் காவல்நீட்டிப்பு: சிறுமி கொலை வழக்கில் போக்சோவில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன், கருணாஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு காணொலிக் காட்சி மூலம் இன்று போக்ஸோ விரைவு நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி முன்பு ஆஜராகினர்.
அதையடுத்து மேலும் 15 நாட்களுக்கு அவர்களது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்படி வரும் 27-ம்தேதி வரை அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.