

சென்னை: ஜாபர் சாதிக் மீது எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில், கடந்த 2013-ம் ஆண்டு ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இருந்து அவர் 2017-ம் ஆண்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார், என்று சென்னைப் பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சமீபத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு முனையத்தில் (NCB)வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது சென்னை பெருநகர காவல் துறையில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவி வருகிறது.
ஏற்கெனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளபடி மேற்படி ஜாபர் சாதிக் மீது சென்னை பெருநகர காவல் துறை, எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் (P-5) போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் (NDPS) சட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலிருந்து கடந்த 08.03.2017 அன்று நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, “ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதியை வைத்து சம்பிரதாயத்துக்கு ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்." என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > ஜாபர் சாதிக் விவகாரம் | முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க இபிஎஸ் வலியுறுத்தல்