

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டாறில் படையலுக்கு வைத்திருந்த மதுவை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் மதுவில் விஷம் கலந்திருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் கோட்டாறு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் ( 50 ), தொழிலாளி. இவரும், வடலிவிளையை சேர்ந்த அருள் ( 33 ) என்பவரும் அங்குள்ள கோயில் திருவிழாவில் படையலுக்கு வைக்கப்பட்ட மதுவை அருந்தினர். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வகுமார் உயிரிழந்தார். அருளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செல்வ குமாரின் பிரேத பரிசோதனையில் மதுவில் விஷம் கலந்திருப்பதும், அதை குடித்ததால் அவர் இறந்திருப்பதும் தெரியவந்தது. திருவிழாவில் சுவாமிக்கு படையலுக்கு வைத்த மதுவில் யாரும் விஷம் கலந்தார்களா?, அல்லது மதுவில் விஷம் கலந்து செல்வகுமார் குடித்தாரா? என்பதை கண்டறிய கோட்டாறு போலீஸார் அப்பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.