

குமுளி: தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள குள்ளப்பக் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (55), தோட்டக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு அக்.28-ம் தேதி ரோந்து சென்ற கம்பம் வனத் துறையினர், இவரை சுட்டுக் கொன்றனர்.
ஈஸ்வரன் வன எல்லையில் மின்வேலி அமைத்திருந்ததாகவும், இதுகுறித்த விசாரணையின்போது வனத் துறையினரைத் தாக்க முயன்றதால் சுடப்பட்டார் என்றும் வனத் துறை விளக்கம் அளித்தது.
ஆனால், ஈஸ்வரனின் உறவினர்கள் கூறும்போது, வனத் துறையினரின் சில செயல்களைக் காட்டிக்கொடுக்க முயன்றதால், அவர் கொல்லப்பட்டார் என்றனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, வனவர் திருமுருகன், வனக் காப்பாளர் ஜார்ஜ்பென்னி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தேனி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீஸார் மதுரையில் பணிபுரிந்த திருமுருகன், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணிபுரிந்த ஜார்ஜ்பென்னி ஆகியோரைக் கைது செய்து, குமுளிக்குஅழைத்து வந்தனர்.
உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் ராமநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.