Published : 01 Mar 2024 04:56 AM
Last Updated : 01 Mar 2024 04:56 AM

திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சென்னை வீட்டுக்கு `சீல்' வைப்பு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக்கின் சென்னை சாந்தோமில் உள்ள வீடு

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்குள் பூட்டை உடைத்து நுழைந்த டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர். மேலும், வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15-ம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.

கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அவரையும், அவரதுகூட்டாளிகளையும் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஜாபர் சாதிக் பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்குநிகராக போதை தரக்கூடியது மெத்தாம்பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.

இதன்மூலம் கோடிகளில் புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார்.

இதுதவிர, ஹவாலா (ஆவணம் இல்லா பணம்) தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

மேலும், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x