‘விளம்பரம் பார்த்தால் வருமானம்’ - கோவையில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் போலீஸ் விசாரணை

கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் அலுவலகத்துக்கு விசாரணக்கு ஆஜரான சக்தியானந்த் |  படம்: ஜெ.மனோகரன்
கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் அலுவலகத்துக்கு விசாரணக்கு ஆஜரான சக்தியானந்த் |  படம்: ஜெ.மனோகரன்
Updated on
2 min read

கோவை: விளம்பரங்கள் பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்ற விவகாரத்தில் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் கோவையில் குற்றப் பிரிவு போலீஸார் இன்று (பிப்.5) விசாரணை நடத்தினர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் சார்பில் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம் என்றும், அந்த செயலி மூலம் அனுப்பப்படும் வீடியோக்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் அந்த செயலி மூலம் அனுப்பப்படும் யூடியூப் வீடியோக்களில் வரும் விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், பிற மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இச்செயலியை பதிவிறக்கம் செய்து, பணம் செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.

மேலும், கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள் மற்றும் அதில் வரும் வீடியோக்களில் வரும் விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.5 மூலம் ரூ.1,000 வரை பணம் சம்பாதிக்கலாம் என்று அந்நிறுவனத்தினரால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் எவ்வித வருவாயும் இன்றி, அதில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு எவ்வாறு அதிகப்படியான தொகையை கொடுக்க முடியும் என்றும், மக்களை ஏமாற்றி பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை மோசடி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தியானந்தன் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தியானந்த்தை நேரில் ஆஜராக மாநகர குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து சக்தியானந்த் இன்று (பிப்.5) கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். அவரிடம் மாநகர சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீஸார் விசாரித்தனர். பின்னர், அவர் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக நிர்வாக இயக்குனர் சக்தியானந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ எங்களது நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எவ்வாறு பணம் கொடுக்கப்படுகிறது? மேலும் விற்கப்படும் பொருட்களின் விபரங்கள் குறித்து போலீஸார் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் உரிய பதில் அளித்தேன். மேலும் என்னிடம் 87 வகையான விற்பனை பொருட்கள் உள்ளன. அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்களின் மாதிரிகளை சமர்பித்துள்ளேன்.

போலீஸார் என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விளக்கம் அளிப்பேன். எல் அண்டு டி பைபாஸ் சாலையில் கூடிய கூட்டத்தை நான் கூட்டவில்லை. அதில், நானும் ஒருவனாக கலந்து கொண்டேன். படித்தவர்கள் தான் என்னுடைய செயலியை பயன்படுத்துகின்றனர்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in