இந்தியாவில் சட்டவிரோதமாக 3 ஆண்டுகளாக சுற்றிய ஈரான் நாட்டுக்காரர் மதுரையில் கைது

இந்தியாவில் சட்டவிரோதமாக 3 ஆண்டுகளாக சுற்றிய ஈரான் நாட்டுக்காரர் மதுரையில் கைது

Published on

மதுரை: இந்தியாவில் சட்டவிரோதமாக 3 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த ஈரான் நாட்டுக்காரரை மதுரையில் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை நேதாஜி ரோடு பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், வெளிநாட்டு கரன்சி மாற்றுவது போல நடித்து அங்குவந்த ஒருவர், வெளிநாட்டுப் பணத்தை திருடி தப்பியது குறித்த புகார் தொடர்பாக மதுரை திடீர் நகர் போலீஸார் விசாரித்தனர். மேலும், மதுரையில் வெளிநாட்டுப் பணத்தை திருடி தப்பிய நபர் குறித்து மாநிலத்திலுள்ள அனைத்து வெளிநாட்டு பண பரிமாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் அந்த நபர் குறித்த தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியில் வெளிநாட்டு கரன்சிகள் மாற்றும் நிறுவனம் ஒன்றில் பணத்தை திருடிய நபர் ஒருவர் பிடிப்பட்டார். விசாரணையில், அவர் தெற்கு டெல்லி கிருஷ்ணா மார்கெட் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ( 47) என, தெரியவந்தது. ஈரான் நாட்டைச் சேர்ந்த அவர், 2018-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வந்ததுள்ளார். சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சுற்றித் திரிந்து கொண்டு வெளிநாட்டு பண மோசடி, கரன்சி திருட்டிலும் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரது பாஸ் போர்ட் மும்பையிலுள்ள ஈரான் தூதரகத்தில் சிக்கியதும், மகாராஷ்டிராவில் வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

மதுரை திடீர்நகர் புகாரிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, மதுரை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை தனியார் நிறுவனத்தில் அவர் கரன்சி நோட்டுக்களை திருடியதும், 3 ஆண்டாகவே அவர் தனது பெயரில் ஆதார், பான் கார்டு சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in