Published : 24 Jan 2024 08:55 PM
Last Updated : 24 Jan 2024 08:55 PM

சிவகாசியில் பூட்டிய வீட்டின் ஜன்னலை அறுத்து 50 பவுன் நகைகள், ரூ.90,000 திருட்டு

சிவகாசி: ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் பூட்டிய வீடுகளை குறிவைத்து நடக்கும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சிவகாசி பொதிகை நகரில் பூட்டிய வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 50 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

சிவகாசி பொதிகை நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (60). இவரது மனைவி மனைவி கீதா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டிலும், மற்றொருவர் வெளியூரிலும் வேலை பார்த்து வருகின்றனர். ஜெகநாதன் அச்சு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஜெகநாதன் குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்றார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்தை காணவில்லை. கதவு உடைக்கப்படாமல் இருந்ததால், வீட்டில் பார்த்தபோது, ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விருதுநகர் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்து, கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இதேபோல் ஜனவரி 1-ம் தேதி சிவகாசி பிருந்தாவன் நகரில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றனர். வீட்டில் நகை, பணம் இல்லாததால் தப்பியது. கடந்த 7-ம் தேதி சிவகாசி லட்சுமி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்ற போது, அவரது வீட்டின் கதவை உடைத்து 58 தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ஶ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் வரை 6 மாதங்களில் 11 இடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 102 பவுன் நகை மற்றும் ரூ.4.70 லட்சம் பணம் திருடப்பட்டது. இதில் இரு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அதேபோல் ராஜபாளையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஆளில்லாத 4 வீடுகளிலும், நவம்பர் மாதம் இரு வீடுகளிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர். இச்சம்பவங்களில் ஈடுபட்ட முகமூடி திருடனின் புகைப்படத்தை காவல் துறை வெளியிட்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தை தொடர்ந்து சிவகாசியிலும் ஆளில்லாத வீடுகளை குறி வைத்து நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x