

புதுச்சேரி: வில்லியனூர் பகுதியில் தொடர்ந்து கொலை, வெடிகுண்டு வீச்சு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடரும் குற்றச்சம்பவங்களால் சட்டம் - ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளது. இதனைத் தடுக்க போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் துணை நகரமாக வில்லியனூர் உள்ளது. வில்லியனூர் அருகே உள்ள பத்துக் கண்ணு, கூடப்பாக்கம், பிள்ளையார் குப்பம், தொண்டமானத்தம், ராமநாதபுரம், வி. மணவெளி, ஒதியம்பட்டு, உளவாய்க்கால், ஆரியபாளையம், அரியூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வில்லியனூர் - விழுப்புரம் சாலையில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் - இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என 20 பேர் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், வில்லியனூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மை காலமாக கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கஞ்சா புழக்கமும், இருசக்கர வாகன திருட்டும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆன்லைன் மோசடி, அடிதடி, கொலை சம்பவங்களுக்கு அளவே இல்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்தாண்டு ஜனவரியில் கோபாலன் கடை அம்மா நகரில் ராஜா என்ற இளைஞர் வெட்டிக் கொலை, மார்ச்சில் பாஜக பிரமுகர் செந்தில் குமரன் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை, ஆகஸ்டில் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சண்முக சுந்தரம் அரியூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது கல்லால் அடித்து கொலை, பங்கூரில் மதுக்கடை மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது, கடந்த 5-ம் தேதி ராமநாதபுரம் பகுதியில் தொழிற்சாலை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து தாக்கி நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்தது,
ஆள்மாறாட்டத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியது, பிஆர்டிசி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியது, இம்மாதம் 14-ம் தேதி வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இளைஞர் வெட்டிக் கொலை என அடிக்கடி நடக்கும் பயங்கர சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளன. இதுதவிர செயின் பறிப்பு, வீடுகளை உடைத்து திருடும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதன் காரணமாக வில்லியனூர் பகுதியில் சட்டம் - ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது பற்றி பொது மக்கள் தரப்பில் விசாரித்த போது, “புதுச்சேரியின் துணை நகரமாக இருக்கும் வில்லியனூரில் முன்பை விட மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இங்கு வசதி படைத்தோர், நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். பள்ளிகள், ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பலதரப்பட்டவையும் இங்குள்ளன. இதன் காரணமாக இப்பகுதி செழிப்பான பகுதியாக பார்க்கப் படுகிறது. ஒப்பந்த பணிகளுக்கான ஆட்கள் நியமனமும் இங்கு நடக்கிறது.பல்வேறு தரப்பில் பணம் அதிகளவில் புழங்குகிறது.
இதனால் மாமூல் கேட்டு தொழிற்சாலைகளை மிரட்டும் ரவுடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வில்லியனூர் ரவுடிகளின் புகலிடமாக மாறியுள்ளது. அதோடு கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள பகுதியாகவும் மாறி வருகிறது. அதிக பணம் புழக்கத்தால் மாமூல் பிரச்சினையால் அடிக்கடி ரவுடிகளுக்குள் மோதல்கள் நடக்கின்றன. புதுச்சேரி ரவுடிகள் மட்டுமின்றி, அருகில் உள்ள தமிழக பகுதியைச் சேர்ந்த ரவுடிகளுடன் இளம் குற்றவாளிகளும் இங்கு வந்து தங்கி, பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸாரும் மேம்போக்காக நடந்து கொள்கின்றனர். அரசியல் பிரமுகர்களுடன் ரவுடிகள், குற்றவாளிகள் தொடர்பில் இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். மாறாக ஆங்காங்கே சாலையோரம் நின்று கொண்டு வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து, அபராதம் வசூலிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.
கொலைக் குற்றங்கள் உள்ளிட்ட முக்கிய குற்றங்களை கட்டுப்படுத்த தீவிர ரோந்து மேற்கொள்வதில்லை. பெயரளவில் ரோந்து செல்வதோடு, ஏதேனும் குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு செல்போனில் மூழ்கிவிடுகின்றனர்.சிலரின் பரிந்துரையின். போலீஸார் ஒரே இடத்தில் பணிபுரிந்து கொண்டு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர்” என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘ஆபரேஷன் திரிசூல்’ என்ற பெயரில் ரவுடிகளின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தி, அவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதித்து நடவடிக்கை எடுக்கிறோம்.
தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றோம். இதேபோல் ‘ஆபரேஷன் விடியல்’ என்ற பெயரில் கஞ்சா போதை பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 285 கஞ்சா வழக்குகளை பதிவு செய்து 672 பேரை கைது செய்துள்ளோம். 216.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம்.
இரு சக்கர வாகன திருட்டை முற்றிலும் தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். இரவு முழுவதும் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். வில்லியனூர் பகுதியில் அவ்வப்போது நடக்கும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க இன்னும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடுகின்றனர்.
வில்லியனூர் பகுதியில் போலீஸாரின் ரோந்து பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். உரிய பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும். சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.