பெங்களூரு பெண் சிஇஓ குழந்தையை கொன்ற வழக்கில் கணவரிடம் கோவா போலீஸார் விசாரணை

பெங்களூரு பெண் சிஇஓ குழந்தையை கொன்ற வழக்கில் கணவரிடம் கோவா போலீஸார் விசாரணை
Updated on
1 min read

பெங்களூரு / பனாஜி: பெங்களூரு பெண் சிஇஓ வழக்கில் அவரது கணவரிடம் கோவா போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட சுச்சானா சேத் (39) பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கணவர் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து கோரி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்குஇறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சுச்சானா சேத், தனது 4 வயது மகனை கோவாவுக்கு அழைத்து சென்று கடந்த 8-ம் தேதி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மகனின் உடலை சூட்கேஸில் வைத்து பெங்களூரு கொண்டு வரும்போது சித்ரதுர்கா போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதனிடையே இந்தோனேஷியாவில் இருந்து திரும்பிய குழந்தையின் தந்தை வெங்கட்ராமனிடம் போலீஸார் உடலை ஒப்படைத்தனர். பெங்களூருவில் குழந்தையின் உடல் கடந்த 11-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே கோவா போலீஸார் சுச்சானா சேத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் உளவியல் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விசாரித்தனர். அப்போது சுச்சானா சேத், தான் கொலை செய்யவில்லை. மகன் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக கூறியதாக போலீஸார் கூறினர்.

இந்நிலையில் அவரது கணவர் வெங்கட்ராமனிடம் கோவா போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘‘மகனை பராமரிக்க சுச்சானா சேத் மாதத்துக்கு ரூ.2.5 லட்சம் கேட்டார். நீதிமன்ற அனுமதியின்படி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை குழந்தையிடம் வீடியோ கால் மூலம் பேசுவேன். கொலை நடப்பதற்கு முந்தைய தினம் குழந்தையிடம் பேசினேன்'' என கூறி்னார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in