

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நெய்வவிடுதியைச் சேர்ந்த பெருமாள்- ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா(19). அருகில் உள்ள பூவாளூரைச் சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19). பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ளார்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், திருப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருவரும் பணியாற்றினர். இந்நிலையில், டிச.31-ம் தேதி, நண்பர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யாவும், நவீனும் திருமணம் செய்து கொண்டு, வீரபாண்டி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இதையறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் ஜன.2-ம் தேதி பல்லடம் சென்று அங்கு போலீஸில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் ஐஸ்வர்யாவை கண்டுபிடித்து, தந்தை, உறவினருடன் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, ஜன.3-ம் தேதி, ஐஸ்வர்யாவை சொந்த ஊருக்கு அழைத்து வந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை கொலை செய்து, உடலை எரித்து விட்டதாக, நவீன் வாட்டாத்திக்கோட்டை போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் என 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்ததால் ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரே அடித்து கொலை செய்து, பின்னர் சடலத்தை எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜன.10-ம் தேதி ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி, ஐஸ்வர்யாவை கொன்று எரித்தது தொடர்பான தடயங்களை மறைக்க உடந்தையாக இருந்ததாக பெருமாளின் உறவினர்களான சின்னராசு(30), திருச்செல்வம்(39), முருகேசன்(34) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து, பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி சிறையில் அடைத்தனர்.