க்ரைம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் மதிப்பு வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் செல்லும் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனைசெய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது வந்த சென்னையை சேர்ந்த காஜா மொய்தீன் (32), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த அகமது இப்ராஹிம் (28) ஆகிய இரு பயணிகள் சுற்றுலா விசாவில் செல்வதற்காக வந்தனர்.
அவர்கள் கொண்டுவந்த பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ரூ.65 லட்சம் மதிப்பு வெளிநாட்டு பணம் இருந்தது. பணத்துக்கான முறையான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரின் பயணத்தையும் ரத்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
