கொலைக் களமாகிறதா மதுரை தோப்பூர் பகுதி? - அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் அச்சம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மதுரை: மதுரை அருகே தோப்பூர் பகுதியில் அடுத்தடுத்து, கொலை சம்பவம் நடந்ததால் அப்பகுதி கொலை களமாக மாறுகிறதோ என அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிட கட்டுமான பணி நடக்கிறது. இதில் வடமாநில இளைஞர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாளுக்கு முன்பு, மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த பீகார் இளைஞர் இருவர் கூத்தியார்குண்டு பகுதியில் சமையலுக்கான காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டு திரும்பியபோது, அவர்களை வழிமறித்த இருவர், பணம், செல்போன்களை கேட்டு மிரட்டினர். தர மறுத்ததால் அரிவளால் வெட்டியதில் பீகார் இளைஞர் சுபாஷ் குமார் பஸ்வான் ( 21) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சன்னிக்குமார் பஸ்வான் (22) என்பவர் காயமடைந்தார்.

இந்நிலையில், நேற்று இரவிலும் தோப்பூர் பகுதியில் மற்றொரு இளைஞர் கொலை செய்யப்பட்டார். பணம் கொடுத்த பிரச்சினையில் தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (23 ) என்பவரின் டூவீலரை கும்பல் ஒன்று தோப்பூருக்கு எடுத்துச் சென்றது. பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, டூவீலரை எடுத்துச் செல்ல அக்கும்பல் இஸ்மாயிலை வரவழைத்தது. தனது டூவீலரை எடுக்க, இஸ்மாயில் தோப்பூர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் தாக்கியதில் இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆஸ்டின்பட்டி போலீஸார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், இஸ்மாயிலுக்கும், கஞ்சா விற்கும் கும்பலுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை எழுந்ததும், இதன் எதிரொலியாகவே இஸ்மாயில் கொல்லப்பட்டதும் தெரியவந்தது. கொலையாளிகளை தனிப்படை போலீஸார் தேடுகின்றனர்.

கடந்த 2 நாளுக்கு முன்பு தோப்பூர் பகுதியில் செல்போன் வழிப்பறியின்போது, பீகார் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நடந்தது. ஓரிரு நாளில் மீண்டும் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பது போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தோப்பூர் - கரடிக்கல் செல்லும் சாலையில் மின் விளக்குகள் தொடர்ச்சியாக எரிவதில்லை. மேலும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடக்கிறது. இது குறித்த மோதல் காரணமாகவே இஸ்மாயில் கொல் லப்பட்டிருக்கிறார். அடுத்தடுத்து இரு கொலை நடந்த நிலையில் மேலும், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட சில குற்றச்செயல்கள் தொடர்ந்து நடப்பதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in