

சேலம்: சேலம் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தலையை துண்டித்து சாலையில் வீசிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர். கொலையான நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே குள்ளம்பட்டி பிரிவு சாலையில் நேற்று, இளைஞர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை சாலையில் வீசப்பட்டுக் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து காரிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் தலையை மீட்டு விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்த போலீஸார், அதில் குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ரவுடி திருமலை (25) உருவம் பதிவாகியிருந்தது. இதையடுத்து திருமலையை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் ஜோதி (45) என்பவரை மிரட்டி அவரிடம் ஒன்றரை பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு நீர்முள்ளிக்குட்டை சிவக்திநகரில் உள்ள மதுக்கடையில் மது அருந்தியது தெரியவந்தது.
அங்கு, திருமலைக்கும், அங்கிருந்த 35 வயது நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை அக்ரஹாரம் நாட்டாமங்கலம் ஏரிக்கரைக்கு அழைத்து சென்று அங்கு இருவரும் சேர்ந்த மது அருந்தியுள்ளனர். மீண்டும் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த திருமலை, உடன் வந்தவரின் தலையை கொடூரமாக துண்டித்து குள்ளம்பட்டி பேருந்து நிருத்தம் அருகே சாலையில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து திருமலையை போலீஸார் கைது செய்தனர். ஏரிக்கரையில் கிடந்த தலை துண்டிக்கப்பட்ட உடலை போலீஸார் மீட்டனர். தலை மற்றும் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையான நபர் யார், எந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.