Published : 28 Nov 2023 06:47 AM
Last Updated : 28 Nov 2023 06:47 AM
ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவில் நடைபெற்ற சாலை விபத்தில் இளம் தொழிலதிபர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதி சேர்ந்தவர் தீபக் (23), ரூபேஷ் (24). இவர்கள் இருவரும் சொந்தமாக ஹோட்டல் மற்றும் இன்டீரியர் டெக்கரேஷன் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களது நண்பரான நவீன் (21), ரோகித் (23), கோகுல் நாத் (26) ஆகியோருடன் சேர்ந்து இருவரும் மாருதி ஸ்விப்ட் காரில் கோவளம் கடற்கரைக்கு செல்வதற்காக, மறைமலை நகரில் இருந்து இரவு 9:30 மணி அளவில் சென்றுள்ளனர். .
காரை தீபக் ஓட்டினார். இரவு 9.45 மணி அளவில் கார் ஊரப்பாக்கம் அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்றது. அப்போது ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த ஆம்னி மினி பேருந்து மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்த தகவலின் பேரில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்துதீபக்கின் உடலை மீட்டு, தாம்பரம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரூபேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நவீன், ரோகித், கோகுல் ஆகியமூவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புகாரின் பேரில் தாம்பரம் போக்குவரத்து புலன் விசாரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT