Published : 20 Nov 2023 04:02 AM
Last Updated : 20 Nov 2023 04:02 AM
தருமபுரி: போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் நேற்று தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பென்னாகரம் வட்டம் ஏரியூர் அடுத்த நெருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (50). இவர் ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 18 வயது பெண்ணுடன் சகாதேவனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சகாதேவன் நெருங்கிப் பழகிய நிலையில் அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை வயதில் தற்போது குழந்தை உள்ளது.
இந்நிலையில், அந்தப் பெண்ணை திருமணம் செய்ய சகாதேவன் தயக்கம் காட்டியுள்ளார். எனவே, அந்த பெண் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது.
இதனால் தலைமறைவான சகாதேவன் ஒரு மாதத்துக்கு பின்னர் நேற்று பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீஸார் சிறைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தருமபுரி மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT