

பல்லாவரம்: சென்னை விமான நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் நேற்று அதிகாலை அசுர வேகத்தில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதியதில், பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து தொழிலதிபர் ஒருவர் நேற்று அதிகாலை தனது சொகுசு காரில் பல்லாவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
காரை கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அரியாங்காவு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (28) என்பவர் ஓட்டினார். கார் சென்னை விமான நிலையம் அருகே திரிசூலம் சிக்னலில் நின்று விட்டு, மீண்டும் புறப்பட்ட போது, ஓட்டுநர் அதிவேகமாகக் காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அசுர வேகத்தில், தறிகெட்டு ஓடிய கார் சென்னை விமான நிலைய மேம்பால சுவற்றில் இடிப்பது போலச் சென்றது.
இதனால் ரஞ்சித் உடனடியாக கார் ஸ்டியரிங்கை திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என்று அடுத்தடுத்த வாகனங்களை இடித்துவிட்டு, அங்கு பேருந்து நிறுத்தத்தில் காத்து நின்ற பயணிகள் கூட்டத்தில் பாய்ந்தது.
இதில் பல்வேறு வாகனங்களில் அமர்ந்திருந்த திரிசூலம், கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்த சண்முக நாதன் (50), சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்த பிரபு (29), பெருங்களத்தூர் கலைமணி (35), பிரபாவதி (39), பிரகாஷ் (40) மற்றும் பேருந்துக்காகக் காத்து நின்ற ஆண்கள், பெண்கள் என மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதனால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநரான ரஞ்சித்தைக் கைது செய்து விசாரித்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஆட்டோ மேட்டிக் கியர் வசதி மற்றும் அதிக திறன் கொண்ட கார் என்பதும், போதிய அனுபவம் இருந்தால் மட்டுமே இது போன்ற கார்களை இயக்க முடியும் என்பதும் தெரியவந்தது.
ஆனால், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் ரஞ்சித் நேற்று தான் முதல் முறையாக அந்த காரை இயக்கியுள்ளார். அதனாலேயே வேகமாகச் சென்ற அந்த காரை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.