

ஓசூர்: ஓசூர் அருகே போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற வழிப்பறி நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பு வெளியிட்ட தகவல்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடையவரை கைது செய்ய எஸ்ஐ வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் ஓசூர், பாகலூர், அட்கோ, மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது, ஆந்திரா மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம் குந்தக்கல் அபேஸ்நகர் பகுதியை சேர்ந்த ஷேக் நாம்தார் உசேன் (34) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் நகைப் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், நீண்ட தேடுதலுக்கு பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் குண்டூரில் அவரை பிடித்த தனிப்படை போலீஸார், மாலை விசாரணைக்காக, ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள திருப்பதி மெஜஸ்டிக் பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு ஷேக் நாம்தார் உசேன் ஏற்கெனவே கொள்ளை சம்பவத்தின்போது, தான் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றிருந்த நிலையில், அதை காண்பிக்க செல்வதை போல் சென்றார்.
அப்போது ஏற்கெனவே அங்கு பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த, ஷேக் நாம்தார் உசேன் திடீரென எஸ்ஐ வினோத், முதல் நிலை காவலர்கள் ராமசாமி, விழியரசு உட்பட 3 பேரை, தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து தற்காப்புக்காக, எஸ்ஐ வினோத், துப்பாக்கியால் ஷேக் நாம்தார் உசேனை சுட்டு பிடித்தார். இதில், அவருக்கு வலது காலில் குண்டு அடிப்பட்டு, அங்கே விழுந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் மற்றும் போலீஸார், காயம் அடைந்த எஸ்ஐ வினோத் உட்பட 3 போலீஸார் மற்றும் குண்டு அடிப்பட்ட ஷேக் நாம்தார் உசேன் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஓசூர் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.