

நாமக்கல்: திருச்செங்கோட்டில் பெண் குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற புகாரின் அடிப்படையில், மகப்பேறு மருத்துவர் மற்றும் இடைத்தரகரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி தினேஷ்(29). இவரது மனைவி நாகதேவி. இவர்களுக்கு ஏற்கெனவே 2 பெண்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நாகதேவிக்கு கடந்த 7-ம் தேதி சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமடைந்து வீடு திரும்பினார்.
ரூ.2 லட்சத்துக்கு பேரம்: இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்செங்கோடு சானார்பாளையத்தைச் சேர்ந்த லோகாம்பாள்(38) என்பவர் தினேஷை சந்தித்து, அவரது 3-வது பெண் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விலைக்கு தரும்படி பேரம் பேசியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த தினேஷ், இதுதொடர்பாக கடந்த 12-ம் தேதி திருசெங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குழந்தையை லோகாம்பாள் விலைக்கு வாங்க முயன்றதும், குழந்தை குறித்த தகவலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் அனுராதா, லோகாம்பாளுக்கு தெரிவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், எஸ்பி ச.ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி இமயவரம்மன் தலைமையில் தனிப்படை அமைத்து, இவர்கள் இதுபோலவேறு குழந்தைகளை விலைக்கு வாங்கியுள்ளார்களா? வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை விற்பனை புகார் தொடர்பாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் நேற்று விசாரணை நடத்தினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்: இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது:
திருச்செங்கோடு மருத்துவமனையில் குழந்தை விற்கப்படுவதாகவும், தரகர்கள் மூலம் விற்பனை நடக்கிறது என்றும் செய்தி பரவியது. நீண்டகாலமாக லோகாம்பாள் என்ற பெண் இடைத்தரகராக இருந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. மகப்பேறு மருத்துவர் அனுராதாவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
தீவிர விசாரணையில், இருவரும் சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. காவல், மருத்துவத் துறை அதிகாரிகள் இணைந்து குழு அமைத்து விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளோம். இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று முழுமையாக கண்ட றிந்து, அவர்கள் மீது துறைரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் அனுராதா, லோகாம்பாள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.