மதுரையில் அங்கன்வாடி ஊழியர் தற்கொலைக்கு அதிகாரிகளின் அழுத்தம் காரணமா? - போலீஸ் விசாரணை

அம்சவள்ளி | கோப்புப் படம்
அம்சவள்ளி | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: மதுரையில் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் தற்கொலை விவகாரத்தில் அதிகாரிகளுக்கு எதிராக சிக்கிய கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள தைக்கால் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி அம்சவள்ளி (40). இவர்களுக்கு சூரிய நாராயணன் (20) மகன் உள்ளார். அம்சவள்ளி தைக்கால் 4-வது தெருவிலுள்ள அங்கன்வாடியில் ஊழியராக பணிபுரிந்தார். இவருக்கு, பணி நிமிர்த்தமாக அவரது உயரதிகாரி மூலம் அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்சவள்ளியின் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அவரது மகன் மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், அவர் வழியில் உயிரிந்தது தெரிந்தது. தற்கொலைக்கு முன்பு, அவர் பச்சை மையில் கைப்பட எழுதிய நோட்டு ஒன்றை விளக்குத் தூண் காவல் ஆய்வாளர் ராஜ துரை உள்ளிட்ட போலீஸார் கைப்பற்றினார்.

அதில், "எனது மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் சிடிஓ உள்ளிட்டோர் மட்டுமே காரணம். சூரியா (மகன்) என்னை மன்னிச்சிடு" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் தரப்பில் கேட்டபோது, "அம்சவள்ளி தற்கொலை குறித்து, ஒரு கடிதம் ஒன்று சிக்கியது. இதன்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அம்சவள்ளி குறிப்பிட்டுள்ள அதிகாரியும் வழக்கில் சேர்க்கப்படுவர்" என்றனர்.

(தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in