

தஞ்சாவூர்: கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூருக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக மேற்கு போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தஞ்சாவூர் ரயில் நிலையப் பகுதியில் தஞ்சாவூர் மேற்கு காவல் ஆய்வாளர் சந்திரா, எஸ்ஐ டேவிட் மற்றும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரயிலில் சொகுசு பையுடன் வந்திறங்கிய 5 பேரை சோதனையிட்ட போது, அதில் 15 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்ததையடுத்து அதனைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் செல்வராமர் (40), கம்பம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் ஆசை (28), சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் சசிகுமார் (36), சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த ரவி மகன் கார்த்தி (27), சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரபு (26) என்பது தெரிய வந்ததையடுத்து அவர்கள் 5 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில ஆஜர்ப்படுத்தி திருச்சி சிறையிலடைத்தனர்.
மேலும், விசாரணையில், இவர்கள் 5 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு சென்னை வந்து, அங்கிருந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளனர். இவர்கள் மற்ற மாவட்டங்களிலுள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துளனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பாக போலீஸார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.