'11 கிலோவை எலி சாப்பிட்டதாக போலீஸ் தகவல் - சென்னையில் கஞ்சா வழக்கில் இருவர் விடுவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மாட்டான்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ராஜகோபால் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரை, மெரினா கடற்கரை காவல் நிலைய போலீஸார், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர்.இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கஞ்சாவில் 100 கிராம் கஞ்சாவை, எடுத்து 50 கிராம் நீதிமன்றத்துக்கும், 50 கிராம் சோதனை செய்வதற்காக ஆய்வுக்கூடத்துக்கும் அனுப்பப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் வைத்திருந்த மீதமுள்ள 21.9 கிலோ கஞ்சாவில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குற்றப்பத்திரிக்கையில் உள்ளபடி 21.9 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்வதற்கு பதிலாக குறைவான அளவில் கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்ததால், குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் தீர்ப்பளித்துள்ளார்.

ஏற்கெனவே இதேபோன்று கோயம்பேடு காவல் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே அந்த வழக்கில் போலீஸார் சமர்ப்பித்தனர். மீதமுள்ள கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in