

ஓசூர்: ஓசூரில் நடக்கும் 'லங்கர்' கட்டை சூதாட்டத்தால் அப்பாவி தொழிலாளர்கள் பணத்தை இழக்கும் நிலை உள்ளது. இதைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கிராமப் பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழா மற்றும் தெருக் கூத்து நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியில் பணம் வைத்து விளையாடும் ‘லங்கர்’ கட்டை சூதாட்டம் நடை பெற்று வருகிறது. இச்சூதாட்டம் கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழை மற்றும் விவசாயிகளைக் குறி வைத்து நடத்தப்படுகிறது. இதில், பலரும் பணம், இருசக்கர வாகனங்களை இழந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக காவல்துறை தொடர் கண்காணிப்பால் இச்சூதாட்டம் கட்டுக்குள் இருந்தது. தற்போது, ஓசூரில் தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்களைக் குறி வைத்து ஓசூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே காலை முதல் மாலை வரை, ‘லங்கர்’ சூதாட்டம் களைகட்டி வருகிறது.
மேலும், தங்களின் ஆட்களைப் பணம் கட்ட வைத்து சூதாட்டத்தில் பங்கேற்க செய்து எப்போதும் பரபரப்பாக இருப்பது போல காட்டி, அப்பாவி பொதுமக்களையும் சூதாட்டத்தில் பங்கேற்க வைக்கின்றனர். குறிப்பாக இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர் போதையில் பணத்தை வைத்து ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட பாகலூரைச் சேர்ந்த வெங்கடேசப்பா கூறியதாவது: ஓசூரில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை முடிந்து பல்வேறு இடங்களிலிருந்துபேருந்து நிலையம் வருவோர் மது அருந்த பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருகின்றனர்.
அப்போது, அப்பகுதியில் நடக்கும் ‘லங்கர்’ சூதாட்டத்தில் பணத்தை கட்டி இழந்து வெறும் கையோடு வீடு திரும்பும் நிலையுள்ளது. காலை முதல் இரவு வரை நடக்கும் சூதாட்டத்தில் அப்பாவிகள் பணத்தை இழக்கும் நிலையுள்ளது. இதுதொடர்பாக போலீஸில்புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதனால், சூதாட்டம் நடத்துவோர் எந்த பயமும் இல்லாமல் நடத்தி வருகின்றனர். இதைத் தடுக்க இப்பகுதியில் போலீஸார் ரோந்து சுற்றி சூதாட்டம் நடத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.