

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பட்டதாரி இளைஞரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை, செனாய் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர் ஒருவர் மூலம் சைதாப்பேட்டை காஸாகிராண்ட் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (37)என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. சீனிவாசன் திருவான்மியூரில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். அவர் தான் நினைத்தால் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தர முடியும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய சந்தோஷ், தனக்கு வேலை பெற்றுத்தர கோரி 2019-ல் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட சீனிவாசன் உறுதி அளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திரும்பி கொடுக்கவில்லையாம். மாறாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் சந்தோஷ் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், பண மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சீனிவாசனை தனிப்படை போலீஸார் திருவான்மியூரில் வைத்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.