

கிருஷ்ணகிரி: ஆந்திர, கர்நாடக மாநில எல்லையையொட்டியுள்ள வேப்பனப்பள்ளியில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமரா பழுதாகியுள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் வேப்பனப்பள்ளி உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலகங்கள் உள்ளன. இதனால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அனைத்து தேவைக்கும் வேப்பனப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதேபோல, ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிராம மக்களும் தங்கள் தேவைக்கு வேப்பனப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், காலை முதல் இரவு வரை வேப்பனப் பள்ளியில் மக்கள் நடமாட்டமும், வாகனங்களின் நெரிசலும் இருக்கும். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வேப்பனப்பள்ளி-பேரிகை சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஓரிரு மாதங்களில் பழுதானது.
இதேபோல, வேப்பனப்பள்ளி நகரில் குற்றச்சம்பவங்களைக் கண்காணித்து தடுக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு காவல்துறை சார்பில் கண்காணிப்புக் கேமராக்கள் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டன. இக்கேமராக்கள் போதிய பராமரிப்பு இன்றி பயன்பாடு இல்லாத நிலையில் உள்ளது. இதனால், இரு மாநில எல்லையில் உள்ள இப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக வேப்பனப்பள்ளியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவது: பழுதான உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் உள்ளதோடு, கம்பத்தில், முறையாக பொருத்தப்படாமல் அதிவேகமாக காற்று வீசினால் மின் விளக்கு கீழே விழுந்துவிடும் அபாயத்தில் உள்ளது. இவ்வழியாக ஆந்திர, கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்படுகின்றன.
இதைத் தடுக்கவும், நகரில் நகை பறிப்பு, விபத்து மற்றும் விதிகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராவும் பயன்பாட்டில் இல்லை. இதனால், அண்மைக் காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரேஷன் அரிசி, கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பேரிகை சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கைச் சீர் செய்யவும், குற்றங்களைத் தடுக்க நகரப் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களைச் சீர் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.