Published : 21 Aug 2023 06:06 AM
Last Updated : 21 Aug 2023 06:06 AM

சென்னை | காதல் திருமணம் செய்த இளம்பெண் மின் கம்பியை பிடித்து தற்கொலை

சென்னை: காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டார். சென்னை ராமாபுரம் அம்பாள் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (26). தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணி செய்கிறார்.

இவரது மனைவி சண்முகப்பிரியா (20). இவர்கள் சமூக வலைதளம் வாயிலாக பழகி, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கிப் பழகியதில், சண்முகப் பிரியா கர்ப்பமானார். இதையடுத்து, இரு வீட்டாரும் பேசி, 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சண்முகப்பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின், கணவன் - மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சண்முகப் பிரியா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் அனைவரும் துாங்கிய பிறகு, மொட்டைமாடிக்கு சென்ற சண்முகப்பிரியா, மின் கம்பியை பிடித்துள்ளார். அவர் மீது மின்சாரம் பாய்ந்து, கீழே தூக்கி வீசப்பட்டார்.

நள்ளிரவில் சண்முகப்பிரியாவை காணாமல் முனுசாமி தேடியுள்ளார். அப்போது, அவர் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகப் பிரியா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற ராமாபுரம் போலீஸார், சண்முகப்பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x