

பெங்களூரு: பெங்களூருவில் திரைப்பட இயக்குநரை கடத்தி, தாக்கிய வழக்கில் கன்னட நடிகை ஐஸ்வர்யா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த இயக்குநர் அனிஷ் (35) கன்னடத்தில் 'ஜீவனத பாஷே' என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தின் தயாரிப்பு செலவுக்காக ஆஷீர்வாத் என்ற நடிகரிடம் ரூ.6 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்தாதது மட்டுமல்லாமல், படத்தையும் பாதியிலே நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆஷீர்வாத் மற்றும் அதில் நடித்த புதுமுக நடிகர்கள் சிலருக்கும் அனிஷூக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அனிஷ் கடந்த 9-ம் தேதி ஐஸ்வர்யாவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பெங்களூருவில் உள்ள தனது காரை விற்பனை செய்ய உதவுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா 22-ம் தேதி அனிஷை பெங்களூருவுக்கு வரவழைத்து, காரை வாங்க இந்திரா நகரில் நண்பர் ஒருவர் தயாராக இருப்பதாக அழைத்து சென்றார்.
அங்குள்ள வீட்டுக்கு சென்ற போது அனிஷை அறைக்குள் அடைத்து வைத்து ஆஷீர்வாத் உள்ளிட்டோர் கிரிக்கெட் மட்டையால் தாக்கினர். அவரிடம் இருந்து 22 கிராம் தங்க சங்கிலி, செல்போன், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறித்தனர். மேலும் அவரை பெங்களூரு மாநகருக்கு வெளியே அழைத்து சென்று, கடுமையாக தாக்கினர்.
இதனால் படுகாயமடைந்த அனிஷ் மயங்கியுள்ளார். பின்னர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துவிட்டு, கடத்தல்காரர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் ஆடுகோடி போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அனிஷிடம் நடத்திய விசாரணை, செல்போன் அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நடிகை ஐஸ்வர்யா, நடிகர் ஆஷீர்வாத் உட்பட 11 பேரை கைது செய்தனர். கைதான 11 பேரும் கன்னட திரையுலகில் நடிக்க முயற்சித்துவரும் புதுமுக நடிகர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.