Published : 17 Aug 2023 06:46 AM
Last Updated : 17 Aug 2023 06:46 AM

இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு: மாம்பலம் போலீஸார் இருவர் பணியிட மாற்றம்

சென்னை: இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாம்பலம் காவல் நிலைய போலீஸார் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் காசிம் (45) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 15-ம் தேதி மதியம் சென்ற, மாம்பலம் காவல் நிலைய காவலர்கள் இருவர் பிரியாணி கேட்டுள்ளனர். அப்போது, இன்னும் வியாபாரம் ஆகவில்லை. எனவே, பணத்தைக் கொடுத்து பிரியாணி வாங்கிச் செல்லுமாறு காசிம் கூறினாராம்.

இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற காவலர்கள், நேற்று முன்தினம் இரவு மீண்டும் காசிம் கடைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டுள்ளனர். மேலும், இனி கடைநடத்த முடியாது என்று அவரை மிரட்டியதுடன், பிரியாணிக்கான பணத்தைக் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டனராம். அப்போது, இரு காவலர்களும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் சிலர், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மேலும், காவலர்கள் ரகளையில் ஈடுபடுவதை செல்போனிலும் வீடியோ எடுத்துள்ளனர்.

இதையடுத்து காவலர்கள், தங்கள் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின்பேரில் காசிம் கடைக்குச் சென்ற மாம்பலம் போலீஸார், பிரியாணி கடை உரிமையாளரிடம் புகார் பெற்று, இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அந்த வாகனங்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ஆனந்த், ஜெயபால் ஆகியோருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

அதேநேரத்தில், காவலர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில், காவலர்கள் அத்துமீறியது தெரியவந்தது.

இதையடுத்து, கடையில் தகராறு செய்ததாக காவலர்கள் ஆனந்த் மற்றும் ஜெயபால் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x